Tuesday, March 29, 2011

த்வைதம் - எதுவரை?





மயஸ்கரன் என்ற பெயர்,  ருத்ரத்தின் எட்டாம் அனுவாகத்தில், சிவனின் தனிப்பட்ட பெயர்களைச் சொல்லிக்கொண்டுபோகும்போது வரும் பெயர். இந்த எட்டாம் அனுவாகத்துக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. இதில்தான், பஞ்சாட்சர மந்த்ரமாகிய 'நம சிவாய' என்பது வருகிறது. அதிலும், இந்தப் பஞ்சாட்சர மந்த்ரத்துக்கு நேர் முன்னால் வரும் பெயர் இது.  'மயஸ்கரன்' என்ற பெயருக்கு, விடுதலையளிப்பவன் என்பது பொருள். அந்தப் பொருளைத்தான் இந்த வலைப்பூவின் பொருளாக வைத்திருக்கிறேன்.  இனியும், ஆன்மீகத்தைப் பற்றிய எனது கருத்துகள், இந்த வலைப்பூவில் இடம்பெறும். ஆன்மீகம் என்றவுடன், அது, சில ஆன்மீகவாதிகள் செய்வதுபோல, மற்ற மதங்களையும் மக்களையும் பழித்து,  சார்பு நிலையுடைய கருத்துக்களையே விடாமல் சொல்லிவரும் என்று எண்ணிவிட வேண்டாம். இந்த வலைப்பூவில், திறந்த மனதுடைய கருத்துக்களே இடம்பெறும். எவர் மனமும் புண்படாது.  எனவே, வாருங்கள். . மிகப் பிரம்மாண்டமான சமுத்திரமாகிய ஆன்மீகத்தில் முழுகி, அந்தச் சமுத்திரத்தினுள் அடங்கியிருக்கும் எண்ணிறந்த ரகசியங்களைப் பற்றிய கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளலாம்.


என்னைப்பற்றி . . மிகச்சிறுவயதுமுதலே ஆன்மீகத்தில் இறங்கி, அதன் கரையில் இருக்கும் சிப்பிகளையும், முத்துகளையும் மட்டுமே எடுத்துப் பார்த்திருக்கும் சிறுவன் நான். எனக்கு முன்னர், கருநீல நிறத்தில், தனது எண்ணற்ற அலைகளால் கொந்தளித்துக் கொண்டிருக்கும் பெரும் சமுத்திரமான ஆன்மீகம், ஒரு பெரும் ராட்சஸ ஜந்துவைப்போல் ஆர்ப்பரித்துக்கொண்டு, அருகில் நெருங்குபர்களைக் கபளீகரம் செய்துவிடும் முடிவோடு எல்லையே இல்லாமல் விளங்குகிறது.  இச்சமுத்திரமாகிய ஆன்மீகத்தின் அலைகளின் மிகச்சிறு துளிகள், என்மீது அவ்வப்போது தெளித்ததுண்டு.  இப்படித் தெளிக்கப்பட்டதனாலேயே, அந்தச் சமுத்திரத்தில் குதித்து, அந்தச் சமுத்திரமாகவே ஆகிவிடும் நிலையை எதிர்பார்த்து, கரையில் நின்றுகொண்டிருக்கிறேன். எப்போது அது நடக்குமோ தெரியாது.
  
முதல் கட்டுரையாக நான் எழுத எண்ணியிருக்கும் விஷயம், அத்வைதம் பற்றியது. இந்து மதத்தின் மூன்று கோட்பாடுகளில் ஒன்றாக விளங்கும் விஷயம். மற்ற இரண்டு கோட்பாடுகள், விஷிஷ்டாத்வைதம் மற்றும் த்வைதம். இதைப் படிக்கும் பலருக்கும் தெரிந்திருக்கும்; த்வைதம் என்பதற்குப் பொருள்: 'இரண்டு' என்பது. சமஸ்கிருதத்தில், 'தவி' என்ற சொல்லுக்குப் பொருள், 'இரண்டு' என்பதாகும். எனவே, அதனையொற்றி, த்வைதம் என்ற சொல்லுக்கும், இரண்டாக விளங்குவது என்று பொருள் சொல்லலாம். இரண்டாக விளங்குவது என்றால் என்ன? ஜீவாத்மா, பரமாத்மா என்ற இரண்டைத்தான் அது குறிக்கிறது. பரமாத்மா என்பது இறைவன். ஜீவாத்மா என்பது, கடவுளால் படைக்கப்பட்ட உயிர். எப்பொழுதுமே, இந்த வேறுபாடு இருந்துகொண்டேதான் இருக்கும் என்பதே த்வைதம் என்ற கோட்பாடு சொல்லும் உண்மை. அதாவது, பரமாத்மா என்ற கடவுளை, ஜீவாத்மா என்ற அவனால் படைக்கப்பட்ட உயிர், பக்தி செய்துகொண்டேதான் இருக்கவேண்டும் என்று த்வைதம் சொல்கிறது.


சரி. இதில் என்ன தவறு? கடவுளை எண்ணியெண்ணி உருகுவதுதனே முறை? கடவுள் என்று ஒருவர் இருக்கையில், அவரைப் பக்தி செய்துகொண்டே இருக்கும் மனிதனும் இருக்கத்தானே வேண்டும்? இப்படியொரு கேள்வி எழுகிறதல்லவா? த்வைதக் கோட்பாடு தவறேயில்லை என்பதுதான் நான் சொல்வதும். த்வைதமும் இருக்கத்தான் வேண்டும். ஆனால், த்வைதமே எப்பொழுதும் கூடாது என்பதே நான் சொல்லவரும் விஷயம். அதாவது, ஒரு மனிதன், கடவுளை பக்தி செய்யும் ஆரம்ப காலத்தில், கட்டாயம் த்வைதம் வேண்டும்.  யோசித்துப் பாருங்கள்: 'கடவுளும் நானும் ஒன்று. எனவே, என்னையே நான் எப்படிக் கும்பிடுவது? ஆகையால், பக்தியே எனக்குத் தேவையில்லை' என்று விபரீதமாக ஒரு மனிதன் சிந்திப்பதற்கே, த்வைதமே வேண்டாம் என்ற நிலை வழிசெய்யும். எனவே, தொடக்க நிலையில், 'கடவுளும் நானும் வேறு; அவனாகவே நான் ஆவதற்கு, முதலில், அவனை எண்ணிப் பக்தி செய்யும் நிலை வேண்டும்; பக்தியில் நமது மனம் கரைந்து, முடிவில் அவனாகவே நாம் மாறிவிடும் அத்வைத நிலை சித்திக்கும்; அதுவரை, த்வைத நிலையாகிய கடவுளும் நானும் வேறு என்ற எண்ணத்திலேயே வழிபட்டு வர வேண்டும்' என்றே ஒரு மனிதன் தனது இன்னிங்க்ஸை ஆரம்பிக்க வேண்டும். அதுதான் முறையும் கூட.


என்னடா இந்த ஆள் அத்வைதம் பற்றி சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு த்வைதத்தைப் பற்றியே அளந்துகொண்டிருக்கிறானே என்று தோன்றுகிறதா? அத்வைதம் என்ற முடிவுநிலை, த்வைதம் என்ற ஆரம்ப நிலையின் மூலமாகவே சித்திக்கிறது. எனவே, ஒரு மனிதனின் ஆன்மீக முன்னேற்றத்துக்கு, அவசியம் த்வைதம் தேவை.
  
அத்வைதம் - அதாவது, அ - த்வைதம் என்றால், இரண்டு இல்லை என்பது பொருள். அதாவது, ஜீவாத்மா பரமாத்மா என்ற வேறுபாடு இல்லை என்பது இங்கே பொருளாகிறது. மற்ற சித்தாந்தங்கள், கடவுள் என்று ஒருவன், சொர்க்கம் என்ற ஒரு இடத்திலோ, அல்லது அவனுக்கென்று இருக்கும் ஒரு இருப்பிடத்திலோ இருக்கிறான் எனவும், இறப்புக்குப் பின், அந்த இடத்துக்கு நாம் சென்று, அவனை வழிபட்டுக்கொண்டே இருப்போம் என்றும் வலியுறுத்த, அத்வைதமோ, ஒரே போடாக, இறந்தபின்தான் மோட்சம் என்பது இல்லை என்றும்,  உயிரோடு இருக்கும்போதே மோட்சத்தை அடைய முடியும் என்றும் சொல்லிவிடுகிறது. எப்போது ஒருவன், தானும் கடவுளும் வேறல்ல என்னும் உண்மையை அனுபவபூர்வமாக புரிந்துகொண்டுவிடுகிறானோ, அப்போதே அவன் மோட்சத்தை அடைந்துவிடுகிறான் என்பதே அத்வைதம் சொல்லும் உண்மை.  இங்கே, அனுபவபூர்வமாக என்பது முக்கியமான வார்த்தை. யார்வேண்டுமானாலும் மிக எளிதில் சொல்லிவிடலாம் - கடவுளும் நானும் ஒன்றுதான் என்பதை. ஆனால், அதை அனுபவத்தில் உணர்ந்தாயா என்றே அத்வைதம் கேள்வி கேட்கிறது. நாம் ஒரு வேலைக்குச் செல்கிறோம். அந்த வேலை, நாம் இன்ன இன்ன செய்யவேண்டும் என்று வலியுறுத்துகிறது. நாமும் அவற்றைச் செய்துவிட்டு, அந்த வேலையை நமது பெயரோடு போட்டுக்கொள்கிறோம் - என்ஜினியர் என்றோ மருத்துவர் என்றோ அல்லது இன்னும் அவற்றைப்போலவே இருக்கும் பல்வேறு தொழில்களாகவோ.  அந்த வேலையைச் செய்யாத ஒருவன் - வெளியிலிருந்து அந்த வேலை செய்பவர்களை மட்டும் பார்த்துக்கொண்டே இருக்கும் ஒரு மனிதன் - நானும் ஒரு மருத்துவர்தான் என்று சொல்லிக்கொண்டு திரிந்தால் எப்படி இருக்கும்? அவன் ஒரு பைத்தியம் என்று ஊர் முடிவுகட்டிவிடுமல்லவா? (இப்பொழுது இது சகஜமாக நடந்துகொண்டுதானிருக்கிறது என்பதை விட்டுவிடுவோம்). அதைப்போல்தான், அத்வைதம் என்ற நிலையை அனுபவபூர்வமாக உணர்ந்தால் மட்டுமே அவன் ஞானி. சும்மா வாய்வார்த்தைகளால் அளந்துகொண்டு திரிந்தால் அவன் ஒரு ஆஷாடபூதி என்றே அர்த்தம்.


கடவுளும் நானும் ஒன்று என்ற அத்வைத நிலை சித்திக்கும் ஒரு மனிதன், மோட்சத்தை அடைந்துவிடுகிறான். மோட்ச நிலை என்பது வேறொன்றுமில்லை - தெளிந்த அத்வைத ஞானம் என்பது, இறைவன் என்று நாம் சொல்லும் பிரம்மத்தின் நிலையான ஆனந்தமே. எப்பொழுதும் ஆனந்தமாக இருந்துகொண்டிருக்கும் பிரம்மத்தில் தோய்ந்த நிலை அது. அந்த நிலையில் இருக்கும் அந்த மனிதன், தனக்கு இன்னமும் எவ்வளவு நாட்கள் இந்த பூமியில் வாழ  இருக்கிறதோ, அத்தனை நாட்களும் இதே நிலையில் ஆனந்தமாக வாழ்ந்துவிட்டு, உடல் மரணமடையும்போது, அவனது உயிர், பிரம்மத்திலேயே ஒன்றிவிடுகிறது. இதுதான் அத்வைதம் in a nutshell.


இந்த அத்வைத ஞானம் என்பது, டக்கென்று வந்துவிடாது என்று மறைநூல்கள் சொல்கின்றன. ஒரு மனிதனுக்கு, அத்வைதத்தைத் தேடிச்செல்ல வேண்டும் என்ற ஆசை எழுவதற்கே, பல பிறவிகள் தேவைப்படும் என்பது அவை சொல்லும் உண்மை. இதைப்பற்றி, நமக்கெல்லாம் தெரிந்த ஒரு பிரபல ஆன்மீகவாதி சொல்வது என்னவென்றால்: 'சில குகைகளில், சுண்ணாம்புத்தாது, சொட்டுச்சொட்டாக கூரையிலிருந்து விழும்; அப்படி விழும் தாது, தரையில் இருந்து மெதுவே வளர ஆரம்பிக்கும்; அப்படி வளரும் இந்தத்தாது, ஒரு காலகட்டத்தில், மேலே சொட்டிக்கொண்டிருக்கும் அந்த இடத்தைச் சந்திக்கும்; அப்போது ஒரு பெரிய சுண்ணாம்புத் தூணாக அது மாறும். இதற்கு ஆங்கிலத்தில் ஸ்டேலக்டைட் (Stalactite)  மற்றும் ஸ்டேலக்மைட் (Stalagmite) என்று பொருள். ஆனால், நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டிய ஒரு விஷயம் என்னவெனில், இப்படித் தூணாக மாறுவதற்கு எடுத்துக்கொள்ளப்படும் காலகட்டம், பல கோடி வருடங்கள். இதைப்போலவே, மனிதன், இறைவனின் இயல்பு புரிந்து, அதுவாகவே தானும் ஆகவேண்டும் என்று முயற்சித்தால்,  இறைவனும், தனது அருளை மனிதனின் மேல் பொழிவார்; ஒரு காலகட்டத்தில், இந்த இரண்டு விஷயங்களும் சந்திக்கையில், அத்வைத ஞானம் கிடைக்கும். ஆனால், இதற்கும், பல்லாயிரக்கான ஆண்டுகள் பிடிக்கும் என்பதே உண்மை'. 


இவ்வளவு சுலபமாக நமக்குப் புரியும் வகையில் எளிய முறையில் இந்த அத்வைத தத்துவத்தை விளக்கிய அந்த ஆன்மீகவாதி, நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். பெரிதாக எதுவும் இல்லை. சிறிது ஓய்வுக்குப்பின் மறுபடி அருள்பாலிக்க வருவார். 


இனி வரும் கட்டுரைகளில், அத்வைத தத்துவம் மட்டுமன்றி, ஆன்மீக உலகின் அதிசயங்கள், மர்மங்கள் ஆகிய பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பார்க்கப்போகிறோம். அது மட்டுமன்றி, எனது அனுபவங்களில் நான் கண்ட பல வியப்பூட்டும் விஷயங்களையும் பார்ப்போம். நாளையோ அல்லது நாளை மறுநாளோ எனது கட்டுரை வரும். அதுவரை, ஆனந்தமாக இருங்கள். வாழ்த்துகள்.



1 comment:

geethappriyan said...

ஆன்மீகம் என்பது ஒரு வரம்,அது எல்லோரையும் தன்னுள் இழுத்துவிடாது, இறைவனுக்கு தெரியும் யாரை அடியாராக வைத்துக் கொள்ளவேண்டும்,வேண்டாமென்று. கோடிமக்கள் புகழந்தாலும் இறைவன் உயர்ந்துவிடப்போவதில்லை, கோடிமக்கள் தூற்றினாலும் இறைவனோ ஆன்மீகமோ தாழ்ந்து போய்விடுவதில்லை.உங்களின் இந்து மரபு,ஆன்மீகக்கட்டுரைகளை தய்ங்காது எழுதவும்.