Thursday, March 31, 2011

தமிழகத்தில் ஒரு பழங்கால மம்மி


பண்டையகாலத்தில், எகிப்தில், இறந்த அரசகுடும்பத்தினரின் உடல்களைப் பாடம் செய்து, பிரமிடுகளில் புதைத்து வைப்பது வழக்கம் என்று பல புத்தகங்களிலும் படித்திருக்கிறோம். இப்படிச் செய்ததன் நோக்கம், கடவுள்களாகக் கருதப்பட்ட மன்னர்கள், மீண்டும் சொர்க்கத்திலிருந்து திரும்ப வருகையில், அவர்களுடைய பழைய உடைமைகளைத் திரும்ப உபயோகித்துக்கொள்ளலாம் என்பதே (இதன் காரணமாக, சில சமயம், அரசர்களின் வேலைக்காரர்களும் மனைவிகளும், மம்மிகளுடனே புதைக்கப்பட்டது ஒரு சோக வரலாறு). மிகச்சில நாகரீகங்களில் மட்டுமே இந்தப் பாடம் செய்து புதைக்கும் முறை பின்பற்றப்பட்டது. அப்படியிருக்க, நமது இந்தியாவிலும் ஒருசில மம்மிகள் இருக்கின்றன என்றால், உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா? அவற்றைப் பற்றி விரிவாகப் பார்ப்பதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம்.

புனித தாமஸ் பற்றி இந்தக் கட்டுரையைப் படிப்பவர்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஏசுபிரானின் பிரதம சீடர்களுள் ஒருவராக இருந்த தாமஸ், கி.பி ஐம்பத்திரண்டில் இந்தியா வந்து, சென்னையில் ஒரு தேவாலயத்தைக் கட்ட, அவரது புகழ் பரவுவதை விரும்பாத சில விஷமிகளால், ஈட்டியால் குத்தப்பட்டு கி.பி எழுபத்திரண்டில் மரணமடைந்தார். மரணமடைந்த இடமே, புனித தாமஸ் மலை (செய்ன்ட்  தாமஸ் மௌன்ட்) என்று அழைக்கப்படுகிறது.  அவரது உடல், சான்தொமேயில் உள்ள செய்ன்ட் தாமஸ் பஸிலிகாவில் புதைக்கப்பட்டது. இந்த இடத்தில், அவரே கட்டிய ஒரு தேவாலயத்தில்தான் முதலில் புதைக்கப்பட்டது அவரது உடல். அதன்பின், அந்த இடத்தில், செய்ன்ட் தாமஸ் பஸிலிகா கட்டப்பட்டது.

நான் சொல்லப்போகும்  விஷயத்தைப் பற்றிச் சொல்லுமுன், அதையொத்த இன்னொரு விஷயத்தைப் பற்றிச் சொல்லவேண்டும் என்றே புனித தாமஸ் பற்றிச் சொன்னேன். இனி, நாம் வேறொரு விஷயத்துக்குச் செல்லலாம்.

பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மகான், ராமானுஜர். வைஷ்ணவ சம்பிரதாயத்தில்,  பல விஷயங்களை நிறுவியவர். இன்றும், அவையத்தனையும் அப்படியப்படியே பின்பற்றப்படுகின்றன. வைஷ்ணவத்தின் மிக முக்கிய நபராக இவரைச் சொல்லலாம். இவரது பங்களிப்பே, விஷிஷ்டாத்வைதம் என்ற தத்துவம். இவரது காலம் வரை, அத்வைதமே சனாதன தர்மத்தின் முக்கியக் கோட்பாடாக நிலவி வந்தது. ஆதி சங்கரர்,  ஸ்தாபித்திருந்த தத்துவமான அத்வைதம்,  அவரது காலத்துக்குப் பிறகு, ஆயிரத்தைந்நூறு வருடங்களாக மிகப் பிரபலமாக விளங்கி வந்தது (ஆம். ஆதி சங்கரர்  பிறந்த வருடம், கி.மு 509 என்பது எனது கருத்து. பல்வேறு நபர்களால் சொல்லப்படுவது போல, அது கி.பி 788 அல்ல. இதனைப்பற்றி ஒரு கட்டுரை சீக்கிரம் எழுதுவேன்). ராமானுஜர், அத்வைதத்தைப் பற்றிப் பல கேள்விகள் எழுப்பி, ஸ்தாபித்த ஒரு தத்துவமே இந்த விஷிஷ்டாத்வைதம். (இதற்குப் பிறகு, மத்வாச்சாரியரால் த்வைதம் பிரபலமாக்கப்பட்டது). அதுமட்டுமல்லாது,  ராமானுஜரின் விஷிஷ்டாத்வைதபரமான பிரம்ம சூத்ர பாஷ்யம், மிகப்பிரபலமானது (ஸ்ரீபாஷ்யம் என்றே இதற்குப் பெயர் உண்டு).  ராமானுஜர் செய்த பல்வேறு அதிசயங்களைப் பற்றியும் பல கதைகள் நிலவிவருகின்றன. இவர், 120 வருடங்கள் வாழ்ந்து மறைந்ததாக சொல்லப்படுகிறது (கி.பி 1017  முதல் 1137  வரை).

ராமானுஜரின் வாழ்வில் நடந்த ஒரு விஷயம், கிட்டத்தட்ட அனைவருக்கும் தெரிந்திருக்கும். திருக்கோட்டியூர் நம்பியிடம் ராமானுஜர் பலமுறை சென்று, அவரது பதினெட்டாம் வருகைக்குப் பின், 'ஓம் நமோ நாராயணாய' என்ற மந்த்ரத்தின் அர்த்தத்தை ,நம்பி, ராமாநுஜரிடம் சொல்ல, உடனே கோயில் கூரையின் மீது ஏறிய ராமானுஜர், அத்தனை மக்களுக்கும் அந்த அர்த்தத்தை சொல்லி, தன்னைத் திட்டிய நம்பியிடம், தான் ஒருவன் நரகத்துக்குச் சென்றால் பரவாயில்லை; இந்த அத்தனை மக்களும் சொர்க்கத்துக்குச் செல்வதே மேல் என்று வாதிட்ட கதை. அதேபோல், யமுனாசார்யரைச் சந்தித்து அவரது அருளைப் பெறப்போன ராமானுஜர், அதற்குச் சற்றுமுன்னர்தான் மோட்சமடைந்த அவரது  கையின் மூன்று விரல்கள் மட்டும் விரிந்திருப்பதைப் பார்த்து, அதற்கு அர்த்தத்தைக் கண்டுபிடித்துச் சொல்ல, அந்த விரல்கள் மடங்கிய கதையும் உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். யமுனாசார்யரின் அந்த மூன்று ஆசைகளாவன:

1 . வியாசர் மற்றும் சடகோபரின் பெயர்களை, உலகம் உள்ளமட்டும் பரப்புவது
2 . ப்ரம்மசூத்ரத்துக்கு, விசிஷ்டாத்வைதபரமான பாஷ்யம் எழுதுவது
3 . சரணாகதி தத்துவமே மோட்சத்துக்கான பாதை என்பதை உலகில் பரப்புவது


இந்த மூன்று விஷயங்களையும் செய்துமுடித்தார் ராமானுஜர்.

ராமானுஜருக்கு, அவரது காலத்தில் வாழ்ந்துவந்த குலோத்துங்க சோழனால் ஆபத்து வந்தது என்று சொல்லப்படுகிறது. பரமசைவனான சோழன், வைஷ்ணவரான ராமானுஜரைக் கொல்லத் திட்டமிட, அங்கிருந்து கர்நாடகம் சென்ற ராமானுஜர், அரசன் பிட்டிதேவனின் மகளுக்குப் பிடித்திருந்த பேயை விரட்டியதால், ஜைனனான பிட்டிதேவன், தனது பெயரை, விஷ்ணுவர்த்தனன் என்று மாற்றிக்கொண்டு வைஷ்ணவனாக மாறினான். இதுபோன்ற பல அதிசயங்களை அவரது காலத்தில் ராமானுஜர் நிகழ்த்தினார். இதன்பின் ஸ்ரீரங்கம் திரும்பிய ராமானுஜர், கோயிலின் நிர்வாகத்தைப் பல வருடங்கள் திறம்பட ஆற்றினார்.


இப்போதுதான் இந்தக் கட்டுரையின் முக்கியமான விஷயம் வருகிறது.


ராமானுஜர், தனது நூற்றிஇருபதாம் வயதில் முக்தியடைய, அவரது உடல், ஸ்ரீரங்கம் கோவிலிலேயே புதைக்கப்பட்டது. அந்த இடத்தில், அவரது சிலை ஒன்று தானாகவே எழுந்ததாகக் கூறப்படுகிறது. அப்படி எழுந்த அந்தச் சிலை,  அச்சு அசலாக, ஒரு மனிதர் அமர்ந்திருப்பதைப்போலவே இருப்பதை, இன்றும் காணமுடியும். அமர்ந்தகோலத்தில், ஆளுயரத்தில் இருக்கும் அந்தச் சிலை, ஒரு கையை ஆசி கூறும் வகையில் வைத்திருக்கிறது. இன்னொரு கையை, பத்மாசனத்தில் இருக்கும் தனது தொடையின்மேல் வைத்திருக்கிறது. அந்தக் கோயிலைச் சேர்ந்த ஒரு அர்ச்சகரிடம், பல வருடங்களுக்கு முந்தைய எனது இந்தியப்பயணத்தின்போது பேச்சுக்கொடுத்தேன். அப்போது அவர் கூறிய விஷயம், மிகவும் அதிசயமானது. இந்தச் சிலைக்கு, வருடத்துக்கு இருமுறை, கற்பூரப்பூச்சு நடக்கும் என்றும், அந்தச் சமயத்தில், சிலையைத் தொட நேரும்போது, அப்படியே ஒரு மனிதஉடலைத்  தொடுவதுபோலவேதான் இருக்கும் என்றும் தெரிவித்தார். அவரது கருத்து என்னவெனில், ராமானுஜரின் திருவுடலைத்தான் அந்தச் சிலையாகவே மாற்றி வைத்திருக்கிறார்கள் என்பதே. ராமானுஜரின் உடலேதான் அங்கு வைக்கப்பட்டிருக்கிறது என்பது உண்மையானால், அது ஒரு மம்மியாகிறது. இந்திய வரலாற்றில், இறந்த உடல் ஒன்றை இப்படிப் பதப்படுத்தி வைத்திருப்பது அதிசயமா இல்லையா? படிக்கும் நண்பர்கள் சொல்லுங்கள்.


இந்த விஷயத்தைக் கொஞ்சம் எண்ணிப்பார்க்க வேண்டுகிறேன். கல்கியின் பொன்னியின் செல்வன் கதையில் சொல்லப்படுவது போல, கற்பனைக்குதிரையின் மீது ஏறி, இன்றைக்கு சுமார் 874 வருடங்களுக்கு முன் செல்வோம்.


ஸ்ரீரங்கம் திருக்கோயில். இரவு வேளை. எங்கெங்கும் விளக்குகள் ஏற்றப்பட்டு, கோவிலே ஜெகஜோதியாகக் காட்சியளித்துக்கொண்டிருக்கிறது. ஒருபக்கம் மந்திர ஒலிகள். மறுபக்கம், பரவசமான பக்தர்களின் 'நாராயணா' கோஷம். அர்ச்சகர்கள், கோயில் நிர்வாகிகள், அரச குடும்பத்தினர் ஆகிய அனைத்து முக்கியஸ்தர்களும் ஒருபுறம் நின்றுகொண்டிருக்கின்றனர். அனைவரின் முகத்திலும் சோகம் குடிகொண்டிருக்கிறது. அவர்களுக்கு முன்னர், எம்பெருமானார் யதிராஜர் ராமானுஜரின் திருவுடல் கிடத்தப்பட்டிருக்கிறது. உடலின் பொலிவு, இன்னமும் அடங்கவில்லை. உடலெங்கும் திருமண் தடவப்பட்டு,  ராமானுஜர் உறங்கிக்கொண்டிருப்பதைப் போலவே காட்சியளித்துக்கொண்டிருக்கிறது. சிறிதுநேரம் அனைவரும் கூடிப்பேசியபின், மெதுவாக சிலர் முன்வர, புருஷசூக்தமும், நாராயணசூக்தமும் அனைவராலும் பலத்த குரலில் ஓதப்படுகின்றன. ராமானுஜரின் உடலை, மெதுவாக எடுத்து,  பெருமாளின் வசந்தமண்டபம் இருக்கும் இடத்தில் தோண்டப்பட்டுள்ள குழியில், இறக்குகின்றனர்.  அனைத்து பக்தர்களின் பரவசமான 'நாராயணா' கோஷம் எங்கெங்கும் எதிரொலிக்கிறது. மெதுவே, அந்தக் குழி மூடப்படுகிறது.


ஒரு திரைப்படத்தின் அட்டகாசமான முதல் ஐந்து நிமிடங்கள், மேலே சொல்லப்பட்ட விஷயத்தில் இருக்கிறது. உண்மையில், ராமானுஜரின் உடல், புதைக்கப்படவில்லை; அதுதான் பதப்படுத்தப்பட்டு,  சிலையைப்போல உட்காரவைக்கப்பட்டிருக்கிறது என்பதே கோயில் அர்ச்சகர் தெரிவித்த உண்மை.


ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் செல்லும் நண்பர்கள், உடையவர் சந்நிதி என்று அழைக்கப்படும் ராமானுஜரின் சந்நிதிக்குச் சென்று பார்க்க வேண்டுகிறேன். அச்சு அசல், ஒரு மனிதர் அமர்ந்திருப்பதைப்போலவே விளங்கும் அந்தச் சிலையின் தத்ரூபத்துக்கு இணையே சொல்ல முடியாது. ஆஜானுபாகுவான தோற்றத்தில், பிரகாசமாகப் பளிச்சிடும் கண்களின் உயிர்ப்பு, அட்டகாசம். பல வருடங்களுக்கு முன்னர் பார்த்திருந்தாலும், அக்காட்சி எனது மனதை விட்டு அகலவில்லை.


ஆகையால், இந்தக் கட்டுரை இத்தோடு முடிவடைகிறது. மீண்டும் ஓரிரு நாட்களில், இன்னொரு கட்டுரையில் சந்திப்போம்.  
 
பின்குறிப்பு - புகைப்படம் - http://www.ramanuja.org/sv/temples/srirangam/ramanuja-image.html என்ற சுட்டியிலிருந்து எடுக்கப்பட்டது
 

1 comment:

geethappriyan said...

அருமை நண்பரே
இதை அச்சு அசலாக திருவண்ணாமலை பேய்கோபுரத்தெருவில் பாண்டுரங்க ஆசிரமம் பரம்பரையாக நடத்திவரும் சம்பத் சுவாமிகள் என்பவர் என்னிடம் சொல்லியிருக்கிறார்.ராமானுஜரின் நகங்களைகூட பார்க்க முடியும் என்றார்.என்னை ஸ்ரீரங்கம் செல்லும் போது வழி கேட்டு விசாரித்து ஒதுக்குப்புறமாய் இருக்கும் ராமானுஜரின் சன்னதிக்கு போய் தரிசித்துவிட்டு வர சொன்னார்.மேலும் நல்ல விஷயங்களை எழுதுங்கள் நண்பரே.