Friday, April 1, 2011

ஆதிசங்கரரின் காலம் - ஒரு ஆராய்ச்சி



நண்பர்களே . . இன்று நாம் பார்க்கப்போகும் விஷயம், ஆன்மீக உலகின் சென்சிடிவ் பிரச்னை. இன்றும், பல வலைத்தளங்களில் இந்தத் தலைப்பில் உள்ள காரசாரமான கட்டுரைகளைப் படிக்கலாம். இரு தரப்பிலுமே போதிய ஆதாரங்கள் இருப்பதால், எந்தத் தரப்புமே இதுவரை அறுதியாக முடிவுசெய்யப்படாமல் இருக்கிறது. இப்பொழுது நாம் பார்க்கப்போகும் இந்தக் கட்டுரையில், எனது தரப்பினை, போதிய ஆதாரங்களுடன் சமர்ப்பித்து, எதிர்த்தரப்பு முன்வைக்கும் விஷயங்களையும் முழுமையாகச் சொல்லிவிட்டு, எது சரி என்று ஆணித்தரமாக நிலைநாட்ட முயற்சி செய்கிறேன். படித்துவிட்டு, உங்கள் கருத்துகளையும் எழுதுங்கள் (வருங்காலத்தில் எப்போது படித்தாலும் சரி).

இந்தியாவில், இதுவரை, பல மகான்கள் அவதாரம் செய்திருக்கிறார்கள். இந்துமதத்தில் மட்டுமல்லாது, இஸ்லாம், பௌத்தம், ஜைனம் ஆகிய பிறமதங்களிலும், பல மகான்களைத் தரிசித்திருக்கும் பூமி இது. அப்படிப்பட்ட மகான்களில் தலையாய மகன் ஒருவரைப்பற்றித்தான் இந்தக் கட்டுரை. வேறெந்த மகான்களுக்கும் இல்லாத சிறப்பு, இந்த மகானுக்கு உண்டு என்பது, சனாதன தர்மமாகிய இந்துமதத்தின் கருத்து. அதேபோல், இந்த மகன் பிறந்திருக்காவிடில், நமக்கு வேறெந்தப் பண்டிகையையும் கொண்டாடும் வாய்ப்பு என்பதே இல்லாமல் போயிருக்கும் என்பதும், இந்துமதம் சொல்லும் உண்மை.

இவ்வளவு முக்கியமாக நாம் குறிப்பிடும் அளவு யார் அந்த மகான்?

அவர் தான் ஆதி சங்கரர்.

பிற மகான்களைப் பற்றித் தெரிந்த அளவு, ஆதி சங்கரரைப் பற்றி நமக்குத் தெரியாது. ஆதிசங்கரர், அத்வைதத்தை ஸ்தாபித்தார் என்ற ஒரே ஒரு விஷயம் மட்டுமே நமக்குத் தெரியும். அந்த அளவுதான் நமது கல்விமுறை, நமக்குக் கற்பித்திருக்கிறது. ஆனால், ஆதிசங்கரரைப் பற்றிப் பல சுவையான தகவல்கள் உண்டு. கூடியமட்டும் அவரது வாழ்வைப் பற்றியும், அவரது வாழ்வின் மிகமுக்கியமான மர்மத்தைப் பற்றியும் இங்கே கொடுக்க முயல்கிறேன். அதிலேயே, மேலே நான் கூறிய சென்சிடிவ் விஷயமும் வந்துவிடும்.

ஆதிசங்கரரைப் பற்றிப் பார்க்கும் முன், அவரது காலத்திற்கு முந்தைய சூழல் எப்படி இருந்தது என்பதையும் பார்த்துவிட்டால், அவரது பிறப்புக்கான முக்கியத்துவம் நமக்குப் புரியும்.

ஆதிசங்கரர் பிறந்த காலத்தில், இந்தியாவில், இந்து மதமாகிய சனாதன தர்மத்தைத் தவிர, எழுபத்திரண்டு பிற மதங்கள் இருந்தன என்று, சங்கரரின் வாழ்வைப் பற்றிக் கூறும் நூல்களான சங்கர விஜயங்கள் சொல்கின்றன.  இந்தச் சங்கர விசயங்களில், சில நூல்கள், அவரது வாழும் காலத்திலேயே எழுதப்பட்டன. எனவே, அவற்றின் authenticity சந்தேகமில்லாதது. இந்தியாவில், ஆதியிலிருந்து, சனாதன தர்மமே பின்பற்றப்பட்டாலும், நாளடைவில் வேறு பல புதிய மதங்கள் ஸ்தாபிக்கப்பட்டு வந்தன. இந்தப் புதிய மதங்களால், சனாதன தர்மம் சற்றே மங்கியிருந்த சூழல் அது. இந்தப் புதிய மதங்களால் என்ன கேடு வந்துவிட்டது? ஈன அவை இப்போது இல்லை? என்ற கேள்வி எழலாம். இந்தப் புதிய மதங்கள், ஆன்மாவைக் கடைத்தேற்றுவதற்குப் போதியதாக இருந்ததே இல்லை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வழியைச் சொல்லி, மக்களைக் குழப்பின. அவற்றில் சில மதங்கள், கடவுளே இல்லை; வாழ்க்கையை அனுபவிப்பதே லட்சியம் (சார்வாக மதம் - இப்போது பரவலாக நாத்திகம் என்று சொல்லப்படுவது) என்றுவேறு பரப்பிவந்ததால், மக்களுமே குழம்பிப் போயிருந்தனர். பொதுவில், சமூக வாழ்விலும் ஏகப்பட்ட பிரச்னைகள் நிலவி வந்தது. எதைப் பின்பற்றுவது என்றே தெரியாமல், மக்கள், குழம்பிப் போயிருந்த காலகட்டத்தில் தான் ஆதிசங்கரர் பிறந்தார். இது, சங்கர விஜயங்கள் சொல்லும் உண்மை. இப்போது, இன்னொரு கேள்வி. சங்கர விஜயங்கள் என்று நீங்கள் சொல்லும் புத்தகங்கள், எப்படியும் ஆதி சங்கரரைப் போற்றி எழுதப்பட்டவைதானே? ஆகவே, மற்ற மதங்களை கட்டாயம் தூற்றத்தான்  செய்யும். அப்படியிருக்க, அவை நடுநிலைமையாக விஷயங்களைச் சொல்லும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? இந்தக் கேள்விக்கு பதில், சங்கர விஜயங்களில்  மட்டும் இல்லாமல்,  அந்தப் பிற மதங்களின் புத்தகத்திலேயே கூட, ஆதி சங்கரரைப் பற்றிச் சொல்கையில், நாம் பார்க்கப்போகும் உண்மைகளையே சொல்லியிருக்கிறது என்பதுதான். எனவே, நான் சொல்லும் விஷயங்கள், நடுநிலை தவறாதவை என்பதற்கு  இதுவே உதாரணம்.

இன்னொரு விஷயமும் கூறவேண்டும். இந்து மதத்தில் கூறப்பட்டுள்ள உண்மை என்னவெனில், ஒரு அவதாரம் ஏற்படுகிறது என்றால், அது சும்மா just like that நடப்பதில்லை. ஒரு அவதாரத்துக்கான முக்கிய நோக்கம், மக்களை மேன்மைப்படுத்துவதே. வாழ்க்கைச் சுழலில் சிக்கியுள்ள மக்களை, இதுதான் விடுபடும் வழி என்றுசொல்லிக் கடைத்தேற்றுவதே ஒரு அவதாரத்தின் முக்கிய அம்சம். பகவத் கீதையில், பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்குச் சொல்லுவது இதுதான்.

யதா யதாஹி தர்மஸ்ய க்லானிர் பவதி பாரத
அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம்
பரித்ராணாய சாதூனாம் வினாசாயச துஷ்க்ருதாம்
தர்மசம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே
இதற்கு அர்த்தம், எளிமையான வகையில் சொல்லப்பார்க்கிறேன்.

எப்பொழுதெல்லாம் தர்மம் இருட்டால் மூடப்படுகிறதோ, அப்பொழுதெல்லாம், தர்மத்தைக் கைதூக்கிவிட, என்னை நானே பிறப்பித்துக்கொள்கிறேன். சாதுக்களை ரட்சிக்கவும், தீயவர்களை அழிக்கவும், தர்மத்தை நிலைநாட்டவும், யுகம் தோறும் அவதரிக்கிறேன்.

இதுதான் பொருள்.

இப்பொழுதெல்லாம், திரைப்படங்களில், பன்ச் டயலாக் என்று சொல்லப்படுகிறதே; ஐந்தாயிரம் வருடங்களுக்கு முன்னரே, கடவுளே வெளியிட்ட ஆணித்தரமான பன்ச் இது.  அர்ஜுனனுக்கு உறுதி கூறுகிறார் கிருஷ்ணர். எக்காலத்திலும் அவரது இந்த உறுதிமொழி தப்பவே தப்பாது. இது நடந்தே தீரும். எப்பொழுதெல்லாம் உலகத்தின் சமநிலை தவறுகிறதோ, அப்பொழுதெல்லாம் இறைவன், அவதாரங்களை நிகழ்த்திக்கொண்டே தான் இருப்பான். எல்லா மதங்களிலும் இது நடக்கும்.  உலகத்தின் அக்கிரமங்களின் வீரியத்தைப் பொறுத்து, சில சமயம் அடியவர்களை அனுப்பியும், மிகச்சில சமயம் தானே அவதரித்ததும் வருகிறான் இறைவன்.

கிருஷ்ணர் சொல்லும் இந்த அடிப்படையில் பார்த்தாலுமே, சங்கரர் பிறந்த காலகட்டத்தில், எழுபத்திரண்டு மதங்கள் தோன்றி மக்களைக் குழப்பிக்கொண்டிருந்தன. அந்த இருட்டை அகற்றவே சங்கரரின் அவதாரம் நிகழ்ந்தது.

சங்கரர் யார் ?

அவதாரம் நிகழ்வதற்கான காரணத்தைப் பார்த்தாயிற்று.  பொதுவாக ஆதிசங்கரரைப் பற்றிச் சொல்லப்படும் விஷயம், அவர் சிவாவதாரம்  என்பது. அதிலும், தக்ஷிணாமூர்த்தியின் அவதாரமே சங்கரர் என்றுதான் அனைத்து ஆதாரங்களும் சுட்டுகின்றன.  இதற்கு ஒரு ரசமான கதையும் சங்கர விஜயங்களில் இருக்கிறது. சனாதன தர்மம், பிற மதங்களால் ஷீணிக்கப்படுவதனால், தேவர்கள் சென்று சிவனிடம் முறையிட்டதாகவும்,  சனாதன தர்மத்தைக் காப்பாற்றிக் கொடுப்பதாக சிவன் உறுதிகூறியதாகவும், அதனாலேயேதான் சங்கராவதாரம் நிகழ்ந்தது எனவும் அவை சொல்லும்.  இங்கே இன்னொரு கேள்வி. பொதுவில், எவருடைய புகழ்பாடும் புத்தகமாக இருந்தாலும் சரி; அவை, அவரை, அவதாரம் என்றுதான் சொல்லும். அப்படியிருக்க, இந்த சங்கரவிஜயங்கள் மட்டும் எப்படி வேறுபடும்? எனவே, அவை சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்வது? இதற்கு விடை, சங்கரவிஜயங்கள் மட்டுமல்லாது, பிற நடுநிலையான புத்தகங்களிலும்  - சங்கரால் ஒழிக்கப்பட்ட ஜைன மதத்தின் புத்தகம் ஒன்றில் கூட அவரைச் சிவவதாரம் என்று சொல்லியிருக்கிறது - இருக்கும் விஷயங்களைப் படித்தாலே போதும். அவற்றையும் இங்கே பார்க்கத்தான் போகிறோம்.

ஆகவே, அவதாரம் நிகழும் காலகட்டம் வந்தது. சிவகுரு என்பவருக்கும், ஆர்யாம்பாள் என்னும் பெண்மணிக்கும் மகனாகப் பிறந்தார் சங்கரர். இவர்கள், பிராமண ஜாதியைச் சேர்ந்தவர்கள். இங்கே இன்னொரு கேள்வி. ஏன் பிராமண ஜாதியிலே பிறக்கவேண்டும்? எல்லா ஜாதிகளும் ஒன்றுதானே? எனவே, பிற ஜாதிகளில் பிறந்தால் என்ன தவறு? இதற்கு விடை, பல ஜாதிகளிலும் அவதாரங்கள் நிகழ்ந்துதான் வந்திருக்கின்றன. கசாப்புக்கடை வைத்திருந்த தர்மவ்யாதர், ஆத்மஞாநியாக விளங்கியவர் என்று பாரதம் சொல்கிறது ('கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா' என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்தக் கதை இங்குதான் வருகிறது). அதேபோல், நமது அறுபத்துமூன்று நாயன்மார்களிலும் ஆழ்வார்களிலும் இல்லாத ஜாதியா? இங்கு குறிப்பாக பிராமண ஜாதியில் சங்கரர் பிறந்ததற்குக் காரணம், அந்தச் சூழலில், அவர்கள் தான் வேத சாஸ்த்ர விஷயங்களைப் பின்பற்றிக் கொண்டிருந்தனர். எனவே, இந்த ஜாதியில் பிறந்தால் மட்டுமே பிற மதத்தினருடன் வாதம் புரிந்து வேதமதத்தை நிலைநாட்ட இயலும் என்பதே.

இங்குதான், மேலே நான் மர்மம் என்று சொல்லிய விஷயம் வருகிறது.

நமது சரித்திரப் புத்தகங்களில் நாம் படித்திருப்போம்; ஆதிசங்கரர் பிறந்தது கி.பி 788 என்றும், அவர் முப்பத்திரண்டு வருடங்கள் வாழ்ந்தார் என்றும், அவர் இறந்த வருடம் கி.பி 820  எனவும். நான் சொல்லப்போகும் விஷயம் என்னவெனில், ஆதிசங்கரர் பிறந்த வருடம், கி.மு 509 என்பதே. அவர் முக்தியடைந்த வருடம், கி.மு 477 என்பது எனது வாதம். என் வாதம் மட்டுமல்ல; மேலும் பல விஷயம் தெரிந்தவர்களின் வாதமும் இதுதான். அப்படியென்றால், இப்பொழுது ஏன் கி.முவை கி.பி என்று குறிப்பிடவேண்டும் என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது. இதற்கு விடையை, சற்றே தீர்க்கமாக அலசலாம் வாருங்கள்.

சங்கரரின் காலம் : 'ஸான்ட்ரகோட்டஸ்' யார்?

ஆதிசங்கரர் பிறந்த வருடம், கி.மு 509 என்பதற்கு முதல் ஆதாரம் - சங்கரவிஜயங்களில் கொடுத்திருக்கும் சான்று. 'பிராசீன சங்கர விஜயம்' என்ற மிகப்பழமையான புத்தகத்தில், சங்கரரின் பிறப்பைக் குறித்த ஸ்லோகத்தில், கடபயாதி சங்கியை என்ற கணக்கிடும் முறைப்படி, வருடத்தைத் தெளிவாகவே கொடுத்திருக்கிறது. கலியுகம் பிறந்தது கி.மு 3102 என்பதில் எவருக்குமே மாற்றுக் கருத்தே இல்லை. அது, பாரதத்திலேயே  மிகத் தெளிவாகவே கொடுத்திருக்கும் ஒரு எண். கலி பிறந்து 2593 வருடங்கள் கழித்து சங்கரர் பிறந்தார் என்று பிராசீன சங்கர விஜயம் சொல்கிறது. அப்படியென்றால், கி.மு 509 .

அடுத்த ஆதாரம்,  இன்னமும் சற்றே பழமையான ஒரு விஷயத்தைப் பார்க்கிறது. இந்திய சரித்திரம் ஆரம்பிக்கும் புள்ளி எது என்று பல சரித்திர ஆராய்ச்சியாளர்களும் கருதும் ஒரு விஷயம், மெகஸ்தனிஸ் இந்தியா வந்த காலகட்டம். கிரேக்கத் தத்துவ ஆராய்ச்சியாளர் மெகஸ்தனிஸ், சரித்திர காலத்தில் இந்தியா வந்து, அவரது அனுபவங்களை, 'இண்டிகா' என்ற ஒரு புத்தகத்தில் எழுதினார். இந்தப் புத்தகத்தில், இந்தியாவில் ஆட்சிபுரிந்து வந்த அரசனைப் பற்றியும் எழுதியிருக்கிறார். அங்கே தான் ஆரம்பிக்கிறது இந்திய சரித்திரத்தைப் பற்றிய முதல் குறிப்பு. மெகஸ்தனிஸ் குறிப்புகளின்படி, அந்தக் காலத்தில்  ஆட்சி புரிந்துகொண்டிருந்த இந்திய மன்னனின் பெயர், 'ஸான்ட்ரகோட்டஸ்' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.  இந்த 'ஸான்ட்ரகோட்டஸ்' யார் என்று தெரிந்துவிட்டால், அந்த மன்னனின் காலத்தையும் கண்டுபிடித்துவிடலாம். அதனைத் தொடர்ந்து, இந்திய சரித்திரத்தின் பல்வேறு முக்கியக் காலகட்டங்களையும் எளிதில் புரிந்துகொண்டுவிடலாம்.  எனவே, 'ஸான்ட்ரகோட்டஸ்' யார் என்பதில்தான் புதிரே இருக்கிறது. அதேபோல், மெகஸ்தனிஸ், இந்த 'ஸான்ட்ரகோட்டஸ்' என்ற மன்னனின் தந்தைக்குப் பெயர் ஸான்ட்ரமஸ் (Xandrames)  என்றும், 'ஸான்ட்ரகோட்டஸ்' மன்னனின் மகனுக்குப் பெயர், ஸான்ட்ரகிப்டஸ் (Sandrocyptus) என்றும் சொல்லியிருக்கிறார்.

பெரும்பான்மையான சரித்திர ஆராய்ச்சியாளர்கள், 'ஸான்ட்ரகோட்டஸ்' என்ற பெயரில் குறிப்பிடப்பட்டிருக்கும் மன்னன், சந்திரகுப்த மௌரியன் என்று குறிப்பிட்டு, அவனது காலம், கி.மு நான்காம் நூற்றாண்டு என்று சொல்லியிருக்கிறார்கள். ஏனெனில், மெகஸ்தனிஸின் காலம், கி.மு நான்காம் நூற்றாண்டு என்று மிக உறுதியாகவே நிரூபிக்கப்பட்டுவிட்டது. எனவே, மெகஸ்தனிஸ் இந்தியா வந்து விவரித்து எழுதிய 'ஸான்ட்ரகோட்டஸ்' என்ற மன்னன், சந்திரகுப்த மௌரியன்தான். அவனது காலமும், கி.மு நான்காம் நூற்றாண்டுதான் என்பது ஆராய்ச்சியாளர்களின் ஏகோபித்த முடிபு.

எனவே, சந்த்ரகுப்த மௌரியனின் காலம் தெரிந்துவிட்டது. புராண, இதிகாசங்களில் கொடுத்துள்ள அரசர்களின் வரிசையும் தெரியும். ஆகவே,  சந்த்ரகுப்தனுக்குப் பின் வந்த அவனது பேரனான அசோகர், அதற்குப்பின் வந்த வம்சமான சுங்க வம்சம் என்று கணக்கெடுத்து, எல்லாருக்கும் தகுந்த வருடங்களை ஒதுக்கியுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். இந்த வரிசைப்படி பார்த்தால், சங்கரரின் காலம், கி.பி 788 என்று முடிவுசெய்யப்பட்டுள்ளது.

ஆனால் . . .

இங்குதான் ஒரு பெரிய பிரச்னை.  இந்த 'ஸான்ட்ரகோட்டஸ்' என்பவன், சந்த்ரகுப்த மௌரியன் தானா? என்று கேள்வி ஒன்றை நாம் எழுப்பினால், அது அவன் தான்  என்பதற்கு ஆதாரம் பெரியதாக ஒன்றுமில்லை என்றே தெரிகிறது. 'ஸான்ட்ரகோட்டஸ்' - சந்த்ரகுப்தன் ஆகிய பெயர்களில் உள்ள ஒற்றுமையே இந்த முடிவுக்குக் காரணம்.

அப்படியென்றால், நமது வாதத்தின்படி, 'ஸான்ட்ரகோட்டஸ்' என்ற அரசன், சந்த்ரகுப்த மௌரியன் இல்லையென்றால், பின் அவன் யார்?

சரித்திரத்தை சற்றே புரட்டிப் பார்த்தால், சந்த்ரகுப்தன் என்ற பெயரில் இன்னும் சிலர் ஆட்சி புரிந்தது நமக்குத் தெரியவரும். மௌரிய வம்சத்தில் ஒரு சந்த்ரகுப்தன் இருந்ததுபோலவே, குப்த வம்சத்திலும் இரண்டு சந்த்ரகுப்தர்கள் இருந்திருக்கிறார்கள்.  நமது வாதம் என்ன என்றால், 'ஸான்ட்ரகோட்டஸ்',  ஏன்  குப்த வம்சத்து சந்த்ரகுப்தர்களில் ஒருவனாக இருந்திருக்கக்கூடாது என்பதே!

இந்த குப்த வம்சம் மற்றும் மௌரிய வம்சத்தின் தற்போதைய சரித்திரம் சொல்லும் காலம் எது என்றால்:

மௌரிய சந்த்ரகுப்தன்: கி.மு நான்காம் நுற்றாண்டு
குப்த சந்த்ரகுப்தன்        : கி.பி நான்காம் நூற்றாண்டு

இந்த இரு அரசர்களுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் கவனியுங்கள். ஏறத்தாழ 800 வருடங்கள் வருகிறதல்லவா? இதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். அதேபோல், இந்தச் சரித்திரக் குறிப்புகளை வெளியிட்டது, ஆங்கிலேய அரசில் இருந்த சர். வில்லியம் ஜோன்ஸ் என்ற மனிதர். இதையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது இன்னொரு விஷயத்தைப் பார்க்கலாம்.

நமது புராணங்களை எடுத்துக்கொண்டால், பல்வேறு புராணங்களிலும், மகாபாரத யுத்தம் முடிவடைந்த வருடத்திலிருந்து, மகத நாட்டை ஆண்ட வம்சங்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட அத்தனை புராணங்களிலும், ஒரே வகையான பட்டியலே கொடுக்கப்பட்டுள்ளது. வேறுபாடே இல்லை. மகாபாரதத்திலேயே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளின்படி, யுதிஷ்டிரர் அரசாண்ட காலத்தில், கலியுகம் பிறந்தது. அது - கி.மு 3102 . இது மிக உறுதியாக நிரூபிக்கப்பட்ட ஒரு விஷயம். யுதிஷ்டிரர் அரசாண்ட காலத்திலிருந்து, எந்தெந்த வம்சங்கள் மகதத்தை ஆண்டுள்ளன என்று இப்போது பார்க்கலாம். (இந்த வருடங்கள், கி.மு 3139  -3138 ல் இருந்து, கி.மு 328 - 327 வரை. இந்தப் பட்டியல், வாயு புராணம், பவிஷ்ய புராணம், கலியுக ராஜ வ்ருத்தாந்தம், ப்ரிஹத் கதா, மகாவம்சம், அசோகவதனா ஆகிய பல புராண நூல்களில் இருந்து எடுக்கப்பட்டது. அத்தனையிலும் ஒரே வகையான செய்திகளே உள்ளன. புராணங்களில் கொடுக்கப்பட்ட இந்தச் செய்திகள் தவிர, நம்மிடம் வேறு ஆதாரங்கள் இல்லை)


1 . பார்ஹத்ரத வம்சம் - 1006 வருடங்கள்
2. . பிரத்யோத வம்சம் - 138 வருடங்கள்
3. சிசுநாக வம்சம் - 360 வருடங்கள்
4 . நந்த வம்சம் - 100 வருடங்கள்
5 . மௌரிய வம்சம் - 316  வருடங்கள்
6 . சுங்க வம்சம் - 300௦௦ வருடங்கள்
7. காண்வ வம்சம் - 98 வருடங்கள்
8. ஆந்த்ர வம்சம் - 456 .5 வருடங்கள்

ஆகமொத்தம், யுதிஷ்டிரரின் காலத்தில் இருந்து, ஆந்த்ர வம்சம் வரை, 2771 வருடங்கள் கழிந்துவிட்டன. கி.மு 3139 ல் இருந்து கி.மு 368 வரை.   இந்தப் பட்டியலின்படி கணக்கிட்டால், மௌரிய வம்சம், கி.மு 1534 ல் இருந்து, கி.மு 1218 வரை ஆட்சியில் இருந்துள்ளது (நீங்களே கணக்கும் போட்டுப் பார்க்கலாம்). இந்த 316 வருடங்களில், சந்த்ரகுப்தன் ஆட்சிபுரிந்தது, கி.மு 1534 ல் இருந்து, கி.மு 1522 வரையிலான பனிரண்டு வருடங்கள். இவையத்தனையும் சும்மா கொடுக்கப்பட்ட செய்திகள் அல்ல. அத்தனைக்கும் பலமான ஆதாரங்கள் உண்டு.

சரி. இப்போது, ஒரு மிக எளிமையான விஷயத்தைப் பார்க்கலாம். நாம் மேலே பார்த்த பட்டியலில், கி.மு 1534 ல் ஆட்சி புரிந்த சந்த்ரகுப்த மௌரியன், மெகஸ்தனிஸின் காலமான கி.மு நான்காம் நூற்றாண்டில் எப்படி இருந்திருக்க முடியும்? இரண்டுக்கும் இடையே கிட்டத்தட்ட 1100 வருட இடைவெளி இருக்கிறதே?

இதுதான் ஆதாரமான கேள்வி.

மௌரிய கால சந்த்ரகுப்தனைப்போலவே, குப்தர்களின் காலத்தில் இரண்டு சந்த்ரகுப்தர்கள் உண்டு என்றும் மேலே படித்தோமல்லவா? ஆந்த்ர வம்சம் ஆட்சியிலிருந்து இறங்கியபின், ஆட்சிக்கு வந்தது, குப்த வம்சம். அதனை ஸ்தாபித்தது, சந்த்ரகுப்தன் என்ற மன்னன். இந்த மன்னனின் காலம், நமது கணக்குப்படி, கி.மு நான்காம் நூற்றாண்டின் முற்பகுதி. இந்த மன்னனுக்குப் பிறந்த மகனுக்குப் பெயர், சமுத்ரகுப்தன். இந்தச் சமுத்ரகுப்தனின் மகனுக்குப் பெயர், சந்த்ரகுப்தன் (இரண்டாம் சந்த்ரகுப்தன்). எனவே, சமுத்ரகுப்தனும், அவனது மகன் இரண்டாம் சந்த்ரகுப்தனுமே, நமது கணக்குப்படி மெகஸ்தனிஸின் காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.  இந்தச் சமுத்ரகுப்தனைத்தான், 'ஸான்ட்ரகோட்டஸ்' என்று மெகஸ்தனிஸ் சொல்லியிருக்கிறார். இவனது தந்தை (முதலாம்) சந்த்ரகுப்தனைத்தான் ஸான்ட்ரமஸ் என்றும், இவனது மகனான (இரண்டாம்) சந்த்ரகுப்தனைத்தான்  ஸான்ட்ரகிப்டஸ் என்றும் மெகஸ்தனிஸ் சொல்லியிருக்கிறார் என்பது  புலப்பட்டுவிடும்.

மெகஸ்தனிஸின் காலத்தில் இருந்தது சந்த்ரகுப்த மௌரியன் என்று 'கண்டுபிடித்த' சர். வில்லியம் ஜோன்சைப் பற்றிய ஒரு கட்டுரை இங்கே படிக்கலாம். உண்மையைச் சொல்லப்போனால், அவருடைய நோக்கமே, இந்தியர்களின் மனதில் வேற்றுமையை விதைப்பதில்தான் இருந்தது என்றே நமக்குக் கிடைக்கும் பல ஆதாரங்கள் சொல்கின்றன.

எனவே, நான் மேலே கொடுத்த தகவல்களின் அடிப்படையில் பார்த்தால், மெகஸ்தனிஸின் காலத்தில் இருந்தது, குப்த வம்ச சந்த்ரகுப்தன் என்று புரிகிறது. இவனுக்கும் ஆயிரத்தைந்நூறு வருடங்களுக்கு முன்னர் இருந்தவன் தான் மௌரிய வம்ச சந்த்ரகுப்தன் என்றும் நமது காலக்கணக்கு அடிப்படையில் புரிகிறது.

இதுதான் உண்மையான இந்திய சரித்திரக் கணக்கு. மிகத்தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ள புராண அடிப்படையில்.

புத்தரின் காலம்

புத்தர் இருந்தது, மௌரிய வம்ச பிம்பிசாரனின் காலத்தில். அதாவது, பிம்பிசாரன் வாழ்ந்தது, நம்முடைய கணக்குப்படி, கி.மு 1800-1700. இது எப்படி நம்மால் சொல்லமுடிகிறது என்றால், மேலே நமது பட்டியலின்படி, மௌரிய வம்சத்துக்கு முன்னால் இருந்தது அவனுடைய வம்சம். புத்தர் பிம்பிசாரனுடைய காலத்தவர் என்பது அனைவரும் ஒப்புக்கொள்ளும் விஷயம். ஆகவே, புத்தரின் காலம், கி.மு 1800-1700 என்று ஆகிறது. தற்காலக் கணக்குப்படி புத்தரின் காலம், கி.மு 5ம் நூற்றாண்டு. இது தவறு. அதற்கு ஆயிரத்தைந்நூறு வருடங்கலுக்கு முன்னர் புத்தர் வாழ்ந்தார் என்பதுதான் உண்மை. 


எனவே, புத்தரின் காலத்துக்கு ஆயிரத்தைந்நூறு ஆண்டுகள் கழித்து, கி.மு 509ல் பிறந்தார் ஆதிசங்கரர் என்பதுதான் நாம் சொல்லவரும் விஷயம். இதற்கு இன்னமும் பல ஆதாரங்கள் உள்ளன. குறிப்பாக, புரி, பதரி மற்றும் காஞ்சி ஆகிய மடங்களில் உள்ள சங்கராச்சாரியார்களின் பட்டியலை எடுத்துப் பார்த்தால், அதிலேயே கி.மு 488ல் இருந்து இன்று வரை உள்ள அனைத்து சங்கராச்சாரியார்களின் முழுப்பட்டியலும் உண்டு. இந்த மூன்று மடங்களுமே, கி.மு 509ஐத்தான் ஆதரிக்கவும் செய்கின்றன. ஸ்ருங்கேரி மடம் மட்டுமே கி.பி 788ஐ ஆதரிக்கிறது. ஆனால், அவர்களிடத்தில் உள்ள பட்டியலில் பல குளறுபடிகள் உள்ளன (அதில் உள்ள பல சங்கராச்சாரியார்கள், முன்னூறு நானூறு வருடங்களுக்கு உயிர்வாழ்ந்தவர்களாக இருக்கும்). மட்டுமல்லாது, குடாலி என்ற, ஸ்ருங்கேரிக்குப் பக்கத்தில் இருப்பதுதான் சங்கரர் ஸ்தாபித்த மடம் என்றும், இந்த ஸ்ருங்கேரி மடமே அதற்குப்பின் உருவானதுதான் என்பதற்கும் ஆணித்தரமான சாட்சிகள் உண்டு. 


ஆகவே, இதுதான் ஆதிசங்கரரின் காலத்தைப் பற்றிய நமது வாதம். 


உதவிபுரிந்த நூல்கள் மற்றும் இணையதளங்கள்:


1. தெய்வத்தின் குரல் - ஐந்தாம் பகுதி
2. Kota Venkatachalam - Age of Adi Sankara 
3. http://janamejayan.wordpress.com/category/date-of-adi-sankara/


மீண்டுமொரு கட்டுரையில் உங்களைச் சந்திக்கிறேன். இதுகுறித்து என்ன விஷயமாக இருந்தாலும், பின்னூட்டமிடுங்கள். ஆரோக்கியமான வாதம் புரிவோம்.



2 comments:

மதுரை சரவணன் said...

thanks for sharing. after read all i come again and post. ok

எல் கே said...

good one